நேசத்தின் பாதையில் பாரபாஸ்
(நாடகம்)
மூலக்கரு - பேர் லாகர்குவிஸ்ட்
கதை, நாடக வடிவம், வசனம், பாடல் -
என். கம்கோராஜா
காட்சி 1
இடம்: லூர்தியா வீடு (மதுபான விடுதி அமைப்பும் கொண்டது)
நேரம்: இரவு
மாந்தர்கள்: குண்டுப் பெண் லூர்தியா, பாரபாஸ், நிகோலஸ்
( ஓர் ஒற்றை மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது. சிவந்த மேனி கொண்டவளான சற்றே பருத்த
பெண் லூர்தியா வெள்ளுடையும் கருத்த உதடுகளும் - பொன்னிறக் கூந்தலும் எடுப்பான எழிலும் கொண்டு கவர்ச்சி உடன் பாடி ஆடுகிறாள் . ஏக்கமும் எதிர்பார்ப்பும் - விரகதாபமும் அவள் முக பாவனைகளில் - உடல் அசைவுகளிலும் தெரிகின்றன).
பாடல்:-
பல்லவி:
கொள்ளைக்காரா.. கொள்ளைக்காரா.. - என் உள்ளமதைக் கொள்ளை கொண்ட
கொள்ளைக்காரா.. கொள்ளைக்காரா..
உன் வருகை நோக்கி எதிர்பார்த்தேன்
உன் இருகை கொண்டு அணைப்பாயா..
கொதித்திடும் இதய தாகமதை அணைப்பாயா..
என் இதழ்ரசம் பருகி தணிவாயா..
தவித்திடும் விரகத் தீயை தணிப்பாயா..
(கொள்ளைக்காரா..)
சரணம்
குளிர்க் காத்தடிக்குது
தளிர் காத்திருக்குது
உயிர் தான்துடிக்குது
எலும்பில் ஊசி தைக்குது
ஏக்கம் என்னை வதைக்குது
துன்பப் பூ திறந்து
இன்பத்தேன் அருந்து - நீதானே
என்னோட வருவாய்
எப்போது வருவாய்
தேன் கசந்திடும் தறுவாயினில்
பூ கசங்கிடும் நுழைவாயினில்
வருவாய் ஒருவாய் அமுதம் தருவாய்
வஞ்சி அஞ்சுகத்தை இறுக்கி
நெஞ்சில் கொள்ளை அருஞ்சுகத்தை
அருளடா அருளடா
அஞ்சி அகலாதே நெருங்கி
பிஞ்சின் தொல்லைக் கொடுங்கனலை
அகற்றடா அகற்றடா
(கொள்ளைக்காரா..)
(பாடல் முடிந்தவுடன் மெழுகுவர்த்தி அருகில் லூர்தியா முழந்தாளிட்டு வேண்டுகிறாள்)
லூர்தியா: நல்லது நடக்கட்டும். எங்கிருந்தோ வந்தான். இந்த அநாதையின் உடலை வேட்டையாடியது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் கொள்ளை கொண்டான். எப்போது வருவானோ..? எல்லாம் வல்ல இறைவன் அந்த முரடனை இப்போது அனுப்பி வைக்க மாட்டாரா..?
(கண்மூடி மயக்கமும் கிறக்கமுமாக அப்படியே அமர்ந்திருக்கிறாள். பின்னணியில் அவள் பாடிய பாடலின் இசை மெட்டு ஒலிக்கிறது)
(பாரபாஸ் வருகிறான். குறுந்தாடி கொண்ட அவன் கன்னத்தில் தழும்பு இல்லை. கறுப்பான அங்கி - அதன்மீது கருப்பு ஆட்டுத்தோல் கம்பளி- தலையில் ஒரு பச்சைக் குல்லாய்- முழங்கால் வரையான கால் சராய்- கறுத்த காலணியும் காலில் இருந்து முழங்கால் வரையான காலுறை - இடைக் கச்சையில் நீண்ட வாள், குறுவாள் சகிதமாக வந்த அவன் கண்கள் வெறித்தனமாக அங்குமிங்கும் அலைகின்றன. லூர்தியாவை வெறித்துப் பார்க்கிறான். தலையைச் சிலுப்பி- தலைகுனிந்து பின் நிமிர்ந்து மிடுக்கும் கம்பீரமும் மூர்க்கத்தனமாக உள்ளங்கைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து தேய்த்தபடி லூர்தியாவின் அருகில் வருகின்றான்.)
பாரபாஸ்: லூர்தியா..
லூர்தியா: (கண் திறந்து) பாரபாஸ்.. வந்துவிட்டாயா? எத்தனை நேரம் பாரபாஸ்? ஏன் தாமதம் பாரபாஸ்? (என்று அவன் தோளைப் பற்ற)
பாரபாஸ் (சினத்துடன் உறுமி அவளது கையைத் தட்டிவிட்டு) ம்ம்ம்.. பாரபாஸ்!? எத்தனை பாரபாஸ்? என்னைக் கண்காணாத மறைவிடத்தில் கூட எதிரிகள் அஞ்சுவார்கள் என் பெயரைச் சொல்வதற்கு. மாபெரும் கொலையாளிகளும் தொடை நடுங்குவார்கள் என்னைத் தொடுவதற்கு. என்ன தைரியமடி உனக்கு?!!
லூர்தியா: நான் உன் உடலுக்கு உடைமையாக விளங்கும்போது நான் உன் பேர் சொல்லவும் உன் உடலைத் தொடவும் உரிமையில்லையா எனக்கு?!
பாரபாஸ்: (சினம் தணியாமல்) உடைமை? உரிமை? ம்.. உடைத்துப் போடடி. உரிமை கொண்டாடினால் உரித்து விடுவேன்..ஜாக்கிரதை.. (பற்களை நெரிக்கிறான்)
லூர்தியா: (அவன் கண்களை கிறக்கமாய் பார்த்து,செல்லச் சிணுங்கலுடன்) உரித்துப் போடுவது பிறகு. பூ ஒன்று தேன் கொண்டு காத்திருக்க, தீ வந்து கொதிநீர் ஊற்றுவது பிசகு..
இல்லையா!? (கேட்டபடியே அருகேயிருக்கும் மேஜையில் உள்ள சுரைக்குடுக்கையை எடுத்து அதில் இருக்கும் மதுவை மரக்குவளையில் ஊற்றி அவனிடம் நீட்ட)
பாரபாஸ்: சரிதான். எதையும், எவரையும் பார்த்தாலும் நினைத்தாலும் வெறுப்பும் கோபமும்தான் வருகிறது எனக்கு. அது நான் உயிர் துறந்தாலும் இறக்காத என் உடன்பிறந்த பிறவிக் குணம். (மரக்குவளை புறங்கையால் விலக்கிவிட்டு குடுவையை வாங்கி அப்படியே குடிக்க - லூர்தியா குவளையில் உள்ளதை அருந்துகிறாள்)
பாரபாஸ்: (குடுவையை வீசிவிட்டு) லூர்தியா.. (என்று அவளையே பார்க்கிறான்).
லூர்தியா: என்ன கொள்ளைக்காரா? அப்படியாவது அழைக்கலாம் அல்லவா!?
(என குடுவையை மேஜை மீது வைக்க முற்பட- பாரபாஸ் உரக்க சிரிக்கிறான். அவனது சிரிப்பில் திடுக்கிடும் லூர்தியாவின் கை குடுவையை தவற விடுகிறது).
லூர்தியா: ஏனிந்த பெருஞ்சிரிப்பு?
பாரபாஸ்: ஹா ஹா.. என்னைக் கொள்ளைக்காரன் என்றால், ஏரோது மன்னனை என்ன சொல்லுவாய் நீ? உன்னை விபச்சாரி என்று சொன்னால், ஏரோதின் மனைவியை என்ன சொல்வேன் நான்? வேடிக்கை..
லூர்தியா: கிடந்தொழியட்டும் கீழ்புத்திக்கார்கள். நான் கணிகை மரபில் தோன்றினாலும் கணிகையாகத்தான் இருந்தேன் உன்னைக் கண்டறிந்து கலந்து கொள்ளும் வரை. அதன்பின், இனி எப்போதும் உன் ஒருவனைத் தவிர வேறு எவனுக்கும் அவிழாத முடிச்சென்று ஏற்படுத்திக் கொண்டேன் உறுதி வரையரை.
பாரபாஸ்: (சற்றே சினத்துடன் உறுமியபடியும்) ஹ..! ஹாஹ்ஹா.. இப்படி பேசி யாருக்கும் அகப்படாத என்னை அடிமைப்படுத்தி விடலாம் என நினைக்காதே. அது என்றைக்கும் நிலைக்காதே. யாருக்கும் கட்டுப்படாதவன் இவன்.
லூர்தியா: பலபேர் நடந்த தடமாய் இருந்த என்னையும் உன் ஒருத்தனுக்கான ஒற்றையடிப் பாதையாய் உருமாற்றி விட்டது காலம். அப்படி இருக்க உன்னையும் மாற்றுப் பாதையில் மனம் திரும்பச் செய்யும் காலம்.
பாரபாஸ்: இதோ பாரடி.. எனக்குத் தேவை உனது மனமல்ல உடல். அத்தோடு நிறுத்திக் கொள். போதுமா.. ம்..
லூர்தியா: (கிறக்கமாய்)சரி.. கொள்ளைக்காரா.. நல்ல வேளை நாசமாவதற்குள் வந்த வேலையைப் பாரடா. இன்னும் கொஞ்சம் மது கொண்டு வரவா!?
பாரபாஸ்: வேண்டாம். அது அப்புறம். வாடி(போக முற்படும் அவளது கை பிடித்து முரட்டுத்தனமாக இழுக்கிறான்)
லூர்தியா: அடேயப்பா.. என்னவொரு முரட்டுத்தனம்!!!
(அவளை இழுத்து தன் நேருக்கு நேராக நிறுத்தி மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் மெதுவாக உற்று உற்று பார்த்து பின் அவளது கண்களில் தன் பார்வையை நிலைநிறுத்துகிறான்.)
லூர்தியா: நானென்ன குறுக்கெழுத்துப் புதிரா? ஏனிந்த மேலிருந்து கீழ்- இடமிருந்து வலமான பார்வை?
பாரபாஸ்: நீ புதிரல்ல குறுக்குப் பெருத்தவளே. ஓவியம். அதை இப்படி ரசிப்பதுதான் உண்மை ரசனை. உன்னிடம் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்றுதான் பிடித்திருக்கிறது எனக்கு. அது என்னவென்று தெரிகிறதா உனக்கு?
லூர்தியா:(தன்னைத்தானே ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு) என்ன அது? எனது கண்களா?
பாரபாஸ்:(மறுத்து) ம்.. இவை பூனைக்கண்கள். புலியின் கண்கள்தான் எனக்குப் பிரியம்.
லூர்தியா: எனது இதழ்களா?
பாரபாஸ்: ஆம். திருட்டுக்குத் தேவை கருத்த இருட்டுத்தானே. கருத்த இதழ்களடி உனக்கு.. பிடித்திருக்கிறது இந்த கொள்ளையனுக்கு.
லூர்தியா: (கிறக்கமாய்) காத்தரினா போல எனது இதழ்கள் சிவந்திருந்தால் என்ன செய்வாய்?
பாரபாஸ்: சிவந்த மிளகாய் என்று கொஞ்சம் உப்பும் எண்ணெயும் சேர்த்து வறுத்திருப்பேன். அதை நான் அருந்தும் மதுவுக்கு ஊறுகாயாக கடித்திருப்பேன்.. ஹாஹா.. ஹாஹ்ஹாஹா..
லூர்தியானா: ஆ.. என்ன ஒரு வக்கிர மனம்!?
பாரபாஸ்: வக்கிரம் இருந்தால்தான் வன்முறை புரிந்து வழிப்பறி செய்ய முடியும். அதுவே, இவனுக்கு உக்கிரமான உத்வேகம்.. ஹ.. ஹா.. ஹா
(அப்போது, ஆஜானுபாகுவான நிக்கோலஸ் லூர்தியாவை அழைத்தபடி உள்ளே வருகிறான்.)
நிக்கோலஸ்: லூர்தியா.. லூர்தியா.. (வந்தவன் பாரபாஸ் நிற்பதைக் கண்டு ஓட முற்பட)
பாரபாஸ் (நிக்கோலஸின் குரல்வளையைப் பிடித்து): சொல்லடா.. லூர்தியாவுக்கு என்ன வேண்டும்? சொல்..
நிக்கோலஸ்: ம.. மது வா.. வா.ங்.. மது வாங்கிப் போக வ.. வந்தேன்.. தலைவரே.. (விழி பிதுங்கி அவன் நடுக்கத்தோடு கூற- பாரபாஸ் அவன் கன்னத்தில் அறைந்து)
பாரபாஸ்: காம பூஜையில் கரடியாய் வந்தவனே.. அப்பாலே போ சாத்தானே (என எட்டி உதைக்க - சருண்டு விழாத குறையாய் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறான்).
பாரபாஸ்: (லூர்தியாவை பிடித்து இழுத்து)இருடி.. எரியும் திரியை ஊதி அணைத்து விட்டு பிறகு உன்னை அணைக்கிறேன்.
(பாரபாஸ் எரியும் மெழுகுவர்த்தியை சினத்துடன் ஊதி அணைக்கிறான். வீடு இருள்கிறது).
லூர்தியாவின் கொஞ்சும் குரல்:
இனி.. காம அணைக்கட்டு உடைய ஆனந்தமாய் அணைக்கட்டும் உன் கைகள்.. உஷ்! ஆ.. (இன்பக் கூச்சலுடன் வீறிடுகிறது. "கொள்ளைக்காரா" பாடல் மெட்டு ஒலிக்கிறது)
***** திரை ****