சனி, 30 ஆகஸ்ட், 2025

ரத்த மேகங்கள் / Death in clouds

ஒரு விமானத்தில் பயணி ஒருவர் கொல்லப்படுகிறார். அக்கொலையின் கொலையாளி யார் என உளவியல் துணைகொண்டு துப்பறிகிறார் ஹெர்குல் போய்ரெட். 
க்ரைடான் மாகாண விமானத்தில் பிற்பகுதியில் இக்கொலை நடந்துள்ளது. 11+2= 13 பேர் பயணிக்கின்றனர். +2 என்பது விமானப் பணியாளர்கள் இருவர். 
பயணியர் அவரவரும் அவரவர் சிந்தனையில் இருக்க,  விமானப் பயணத்தின் குலுக்கலால் பாதிக்கப்படும் போய்ரெட் கண்ணயர- அவருக்குப் பக்கத்தில் உள்ள ப்ரையனை எழுப்புகிறான் விமான சிப்பந்தி. உடன் போய்ரெட்டும் விழித்து கூடப் போகிறார். பயணி கிசெல்லி கொலை செய்யப்பட்டிருக்கிறார். 
அவர் குளவி கொட்டி இறந்தாரா? ஆதிவாசிகளால் பயன்படுத்தப்படும் ஊதுகுழாய் அம்பின் விஷத்தால் கொல்லப்பட்டாரா? 
எனில், கொன்றது யார்?
1. ஜேம்ஸ் ரைடர்
2. ஜீன்
3. ஆர்மன்ட்
4. க்ளென்ஸி
5. ப்ரையன்
6. போய்ரெட்
7. நார்மன் கேல்
8. ஹார்பரியின் சிசிலி
9. ஜானே க்ரே
10. வெனிட்டா கேர்
  
பயணிகளின் உடமைகளின் பட்டியலைக் கேட்டுப் பெறுகிறார் போய்ரெட்.
அதில் ஒரு சரியான துப்பு அப்போதைக்கு தவறான நபரைக் காட்டுவதாக அறிகிறார். 
கிஸல்லியை குளவி ஒன்று கொட்டியதால் அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என ஆரம்பத்தில் எண்ண, கிஸல்லி விஷ அம்பெய்திக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது. பறக்கும் விமானத்தில்  விமானத்தில் குளவி பறந்து வந்ததெப்படி.? இவ்வினா அவரது சிந்தனையைத் தட்டியெழுப்புகிறது. பிறகு, அதனடிப்படையிலாராய்கிறார் போய்ரெட். யார் குற்றவாளி.?

புதன், 27 ஆகஸ்ட், 2025

டோட்டாசான்/ ஜன்னலில் ஒரு சிறுமி

டோட்டாசான்

ஜன்னலில் ஒரு சிறுமி

ஜப்பானிய மொழி நாவல்

எழுதியவர்: டெட்சுகோ குரோயாநாகி


தமிழில்: அ.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன் 


நூல் பற்றி:-

இந்த நூலில் உள்ள இளமைக்கால அனுபவங்களின் தொகுப்பு இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்த ஒரு முன்மாதிரியான பள்ளியைப் பற்றிக் கூறுகிறது. அப்பள்ளியில் கற்பதில் மகிழ்ச்சி, சுதந்திரம், அன்பு அடங்கியிருந்தன. வழக்கத்திற்கு மாறான இப்பள்ளியில் இரயில் பெட்டிகளே வகுப்பறைகளாக இருந்தன. அபப்பள்ளி வித்தியாசமான ஒருவரால் நடத்தப்பட்டது. அவர் பெயர் கோபயாஷி. இப்பள்ளியை நிறுவியவரும் தலைமையாசிரியரும் இவரேயாவார். டோக்கியோவில் பிறந்த டெட்சுகோ குரோயாநாகி, ஜப்பான் தொலைக்காட்சியில் தோன்றும் சிறந்த நபராகத் தொடர்ந்து 5 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இந்த நூலில் வரும் டோட்டாசான் இந்தப் பெண்மணியேயாவார்.
டோமோயின் என்பது பள்ளியின் பெயர். இங்கேதான் டோட்டாசான் பயின்றாள்.  டோமோயின் என்பது பள்ளித் தலைமையாசிரியரும் நிறுவனருமான கோபயாஷி அவர்களின் மகன் பெயர் ஆகும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

வரமாட்டியா மம்மி/ராஜேந்திர குமார்

 மிஸ்டர் 'ஙே என தமிழ் வாசகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் ராஜேந்திர குமார். இயல்பாகவே நம் தமிழ் மொழியில் ஙகர வரிசையில் ங், ங என்ற எழுத்துக்களைத் தவிர பிற எழுத்துகள் சொற்களில் இடம்பெறாது. விதிவிலக்காய் தஞ்சை வட்டார வழக்கில் 'ஙொ'ப்புரானே என்று ஒரு சொல்லாட்சி உண்டு. ஆக, ஙகர வரிசை எழுத்துகளில் 'ஙே' என்ற எழுத்தைப் பயன்படுத்தியவர் ராஜேந்திர குமார். 'ஙே' என்று விழித்தான் என்று விழிப்புநிலையின் ஓர் உணர்ச்சியை வடிவம் அளித்தவர்.

இவரது துப்பறியும் கதாபாத்திரங்கள் ராஜா&ஜெனிபர். இவர்களின் தனியார் துப்பறியும் நிறுவனம் காக்காத்தாள் தெருவில் இயங்குகிறது.
வரமாட்டியா மம்மி நாவல் ராஜேந்திர குமாரின் சிறந்த படைப்பு. இதை நான் பாக்கெட் நாவலில் படித்திருக்கிறேன்.
இக்கதை ஒரு சிறுவன் தன் தாயைப் பிரிந்த ஏக்கத்தைப் பிரதிபலிப்பது. இச்சிறுவனுக்கு துணை ஓர் அன்னப்பறவை. அவ்அன்னம் இவனது தோழி.