சனி, 19 பிப்ரவரி, 2022

சிங்கார வேலனார்

 


★வேலன் என்னும் தோழன்★

*****************


*செங்கொடியே செங்கதிரே

செகம்புகழ் சிங்கார வேலனர்

செய்திட்ட சிறப்புகளை

செப்பிட வந்தேன் கேளீர்

*மாசுஅறு வீரனை

மாசறு செம்பொன்னை

ஆசறுசீர் விருத்தத்தில்- எம்மால்

அடக்கிட ஏலாது!

*எழுசீர் விருத்தங்களில்

எழுகதிர் வேலவனை

தொழுது அடியேன் - எடுத்

தெழுதவும் காணாது!

*எண்திக்கும் வென்று

எட்டவியலா அவர்பெருமை தம்மை

எண்சீர் அகவலிட ஆகாது

எனத் திக்கும் என்இந் நிலையில்..

*இந்தியப் பொதுவுடைமையின்

துவக்க விதையை

புதுக் கவிதையால்

புதுக்க விழைந்தேன்;

புதுக்க விளைந்தேன்!

*பதுக்கல் என்பது தனியுடைமை-

ஆனால்,

பாட்டாளிக் கெப்போது பொதுவுடைமை!?

செதுக்க வந்தது 

சிங்கார வேலனெனும்

சிற்பியவரின் சிந்தனை - அதனை

அறுக்க வந்த வாள்வேல்கள் எத்தனை?

அவர் புகழைக்

கூறிட்ட குறுமதிதான் எத்தனை?

கூறிடுவேன் மனமே அவனை நினைந்தனை..

*மயிலை ஊர்தியாகக்

கொண்டவன் சிங்கார வேலன்;

அது கந்த புராணம்.

மயிலைஊர் தியாகத்தைக்

காண விளைந்தவன் 

சிங்கார வேலன்;

இது கம்யூனிச புராணம்.

*நாலுவகையாம் வேதம்

நாலுவருணமாம் சாதி

பகுத்து வைத்து பாரதத்தில்

சடுகுடு ஆடியது சனாதன தர்மம்!

'வருண மழை பொதுவாம்

வாழ்வாதாரம் பாப்பானுக்கும்- அவனை

வாழவைக்கும் பாட்டாளிக்கும் அதுவாம்

ஆகவே, ஈண்டு

'வருணபேதம் தொலைப்போம்

வர்க்கபேதம் ஒழிப்போம்!

பகுத்தறிவு அரிவாள் கொண்டு் அவாளை

திருத்தத் தோற்றுவித்து வெல்ல வைத்தார் 

சிங்கார வேலனார் சமதர்மம்!

*பரதனின் பகீரதப் பிரயத்தனம்

பரதகண்டமெனப் பல்லிளித்த

எச்சத்தில் சனித்தவர்கள்

எச் சத்தில் எம்தோழரை

பரதவர் எனப் பழித்தார்?

*பரதவர் அவரென ஏறிட்டும்

பாராதவர் அவர் ஆற்றிய அருந்தவம் அறியா தவறாயினர்

*பாட்டாளிப் புரட்சி குதிரை பூட்டி

'பகீர்'ரதம் ஓட்டிக் காட்டிடவே-அந்த

மீனவர் இந்திய விடிவெள்ளி -விண்

மீன்அவர் என உணர்ந்தார்; 

உறைந்தார்


*இஃதென்ன விந்தை!

சிற்பி வேறு, ஓவியன் வேறு.

ஈது இலக்கணம். ஆயினும்

ஒருங்கிணைந் ததிப்படி..

ஆம்!

சோவியத்துப் புரட்சியை - நம்நெஞ்

சோவியத்துள் வரைந்த 'சிற்பி' அவர்.

உழைப்பாளி மார்க்கத்திற்கு

உப்பிட் டவர்!

*காவியத்தைப் படைக்கும்

காவி'யர்கள் பாவியரே என்பேன்.

சாவிதனை இகழ்ந்தார் செங்கொடியே!

வறுமைச் சாவு+இதனை இகழ்ந்தார்.

திறவுகோல் சாவிதனை பூட்டினர் எனக் கொள் அல்லனவேல்,

வேல்கொண்டு கொல்!

*அடடாவோ

அடாதென்பேன்..

அருங்கதிரே

இதனைப் பேண்..

*கரைபுரளும் காட்டாற்று வெள்ளத்தை

தீப்பந்தம் கொண்டு எரியத் துணியாதீர்!

அடிவான விடிவெள்ளி

விண்மீனவனின் வீரப்புகழ் ஒளியை

மண்மீதினில் உங்கள்

மகத்தான மெழுகுதிரிகள

மங்கிடச் செய்திடுமோ!

*கலங்கரை விளக்கமவன்

துலங்கிடும் செவ்வொளியை

துட்டரே உங்கள் - குறுங்

கலங்கள் கலங்கலைத் தெளிக்குமோ? தெளிவீர்!

*கம்யூனிச மார்க்கம் அழிக்க

கனவிலும் நினையாதீர்!- அட

இடக்கரடக்கல்களே- உங்கள்

கால்களை நனையாதீர்!

*இரட்சிப்போம் என்று நாளும்

இரட்டை வேடமிட்டோரை

புரட்சி விதைத்து

புலியாகி இரைகொண்டார் எம்வேலர்- இச்

செந்தோழர் கண்டு நடுங்கினர்

வெண்தோலர்

*ஆகாத பத்தியத்தை தன்திறத்தால்

முதலாளித்துவ முனைமுறித்து

எதிர்த்திட்டான் ஏகாதிபத்தியத்தை!

நோகாது நோன்பு கொண்டோரும்

நோக்க வைத்தான் சத்தியத்தை!

*பகுத்தறிவுப் பகலவன் பெரியார் -அப்

பெரியார் எதற்கும் 

சரியார்; ஆரையும் அனுசரியார்- அத்

தகையாருக்கு சரி யார்?

தக்கவர் சிங்கார வேலனார்!

*கறுப்புச் சட்டைக்காரன்

சிகப்புச் சித்தாந்தியோடு

கரங்கள் இணைத்த

கண்ணியப் பொழுதுகள் அவை!

*'கர்மா'வென கதைபேசிய

கயமைப் புதர்களை

களைந்து தூய்மை

நிலமாக்கிய விழுதுகள் அவை!

ஆதலின்தானே,

அடங்கி தன்மானம் காக்கிறது

அகிலம் என்னும் அவை!

*'ஒத்துழையாமை' ஆன

ஒப்பிலா மையைத் தீட்டிய

சிங்கார வேலனார் களைந்தார்

வழக்குரைஞர் அங்கி!

அவ்வங்கி (அவ்+அங்கி)

மார்க்சீய 'மூலதனத்'தை

பொருள் ஈட்ட வைத்த

'முதல்'வங்கி!

*எச்சொல் 

தொழிலாளர் நலம் பேசும் - நற்

சொல்லெனின், - அச்

சொல்லே லெனின்சொல் எனக்

கண்டார்; உரைத்தார்;

தொழிற்சங்கம் அமைத்தார்

*தமிழ்ச் சங்கம் கொண்டது மதுரை

தொழிற்சங்கம் கண்டது மயிலை

அச்சங்கம் வளர்த்தது இறையனார்; முருகவேள்

இச்சங்கம் படைத்தது இறையிலார்; சிங்கார வேல்

*உண்மை!

தமிழ்ச் சங்கம்

தன் இலக்கணத்தில்

புணர்ச்சி விதிகளோடு -இத்

தொழிற்சங்கம் எனுமோர் - விழிப்

புணர்ச்சி விதியையும் பொருத்தி

புனரமைத்துக் கொண்டது!

*மதிய உணவுத் திட்டமதை முதலில்

மண்டினி ஞாலத்திற்கு ஊட்டியது

சிங்கார வேலனார் என்னும்

பால்நிலாச் சோறு - அதை

மதியாதார் ஏற்க மறுத்து பின்னர்

மதித்தவர் வயிற்றினில் வார்த்த்தார் உபகாரமாய்

மூன்றுகனிச் சாறு

*இச்சகமதில் வேலனார் பெருமைகளை

அச்சகத்தில் எழுதி அமையாது

வஞ்சகத்தால் புதைத்தார்

நெஞ்சகம் இலாதோர்

*இத்தனை கொடியது

இருந்தும் வறுமை கொடியது

இருமை ஆகிய வர்க்கம் கொடியது என

இட்ட கொடியது (கொடி+அது)

பாட்டாளி படும் பாட்டைப் போக்க - அவன்

பலவித பலன்களை அடைய

பட்டொளி வீசி பாரெங்கும் பறக்குது!

தொட்ட இடமெலாம்

தோழர் புகழைப்

பேசிச் சிறக்குது!

*வர்க்கபேதம் 

'வருணபேதம் நீங்கிடவே

வரமாய் வந்தவர் புகழ்

வாழிய வாழிய வாழியே

அன்புடன்,

கம்கோராஜா நாச்சிமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக