ஞாயிறு, 4 மே, 2025

தஞ்சை பாஸ்கா நாடகம்-2025/109ஆம் ஆண்டு

   (இயேசுவின்  நிமித்தம் பரபாஸ் விடுவிக்கப்படும் இந்த இடம் பிலாத்துவின் தீர்ப்பிடுதல்)
-----------------------------------------------
                                 (1)          
                  இதோ அழைப்பு
வாழ்வின் நிகழ்வுகளில் பல நினைவில் நின்றவற்றை கூர்ந்தாய்ந்தால் ஒன்றின் தொடர்ச்சியாய் அவ்வொன்றின் சார்புடையதாக மற்றவை நிகழ்கின்றன - நிகழ்ந்துவிடுகின்றன. அந்தப்படி, 2025 ஏப்ரல் 12ம் நாள் எனது கெழுதகு நண்பரும் இலக்கிய வாசிப்பினில் அதீத ஈடுபாடும் ஆழ்திறனும் கொண்டவருமான சீனிவாசக பாண்டியன் உடன் அலைபேசியில் அளவளாவிக் கொண்டிருக்கையில் உரையாடல், கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி நோக்கி திசை திரும்பியது. ருசியான காவியப் பருக்கைகளை பதம் பார்த்தோம் ரசித்து செவிவழி உணவருந்தி. அலைபேசியை அணைத்தேன். 
அதன் பிறகு தீர்க்கதரிசி உருவாக்கி இருந்த அதிர்வலைகளுக்குள் அமிழ்ந்திருந்தேன். அப்போது அழைத்தது எனக்கு  ஓர் அலைபேசி அழைப்பு. 
அழைத்தவர் தஞ்சையின் அற்புதமான -அருமையான மாபெரும் நாடகக் கலைஞன்- மிகச்சிறந்த நடிகன் -மேடை நாடகத்தின் அனைத்து துறைகளிலும் தனது ஆளுமையை நிலை நிறுத்துகின்ற பன்முகத்தன்மை உடைய இவை யாவற்றையும் விட எனது ஆகச்சிறந்த நண்பருமான பிரான்சிஸ்.
"வணக்கம் சாமி சொல்லுங்க சாமி" என்றேன்.
திருமிகு. பிரான்சிஸ் அவர்களை என் போன்ற நண்பர்கள் 'சாமி' என்று அழைப்பது வழக்கம்.
அதற்கு அவர், 20 4 2025 பாஸ்கா மேடையில் பாஸ்கர நாடகம். அதாவது இயேசுவின் சிலுவைப்பாடுகள் குறித்த நாடகம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு என்னை வசன காப்பாளராகவும் அரங்க நிர்வாகத்தில் ஒரு பங்களிப்பாளராகவும் வர முடியுமா?!' என்று அழைத்தார்.
 "ஆஹா !! அது என் பாக்கியம் சாமி.  நிச்சயமாக 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று  நான் வருகிறேன்" என்று மிக மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டேன்.
இங்கேதான் நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு நிகழ்வும், பின் அது சார்புடைய தொடர்ச்சியும் அடுத்தடுத்து தொடர்கின்றன என்கின்றேன்.
பாருங்கள், சற்று முன்பாகத்தான் தீர்க்கதரிசி குறித்த உரையாடல் சீனீவாசக பாண்டியன் உடன். இப்போதோ, இரட்சகரும் தீர்க்கதரிசியுமான இயேசு குறித்த பிரான்சிஸின் அழைப்பு. தீர்க்கதரிசியில் தம் காலத்தின் விடியலாகத் திகழ்ந்தவரும் மக்களில் சிறந்தவரும் அன்பு மயமானவருமான தீர்க்கதரிசி அல்முஸ்தபா  தாம் பிறந்த தீவுக்கு திரும்பிச் செல்ல ஒரு கப்பலுக்காக காத்திருப்பார். கப்பலும் அழைத்துச் செல்ல வருகிறது. அப்போது, அவரைப் பிரிய மனமில்லாத ஆர்பலீஸ் நகர மக்கள் அவரிடம் போதனைகள் கேட்பார்கள். அவரும் குன்றின் அடிவாரத்தில் நின்று போதிப்பார். இதே ஒப்பீடு இயேசுவின்  வாழ்வில் வரிசை மாறி இடம் பெறுகிறது. எவ்விதமெனிலோ, அன்புமயமானவரும் அன்பைப் போதித்தவருமான இயேசுவின் சிலுவைப்பாடு என்பது அந்த தீர்க்கதரிசியைப் பொறுத்தவரை - இயேசுவைப் பொறுத்தவரை அவருக்கு அவருடைய பிதாவினிடம் திரும்பச் செல்லுதல் அல்லவா!! அவர் தம் வாழ்வின் தொடக்கத்தில் அதாவது அவர்தாம் மேய்ப்பர் என மக்கள் உணர்ந்த பிறகான அவரது அதியற்புதமான மலைப்பிரசங்கம். 
ஆக, அல்முஸ்தபா என்ற தீர்க்கதரிசி, ஜுசஸ் என்ற தீர்க்கதரிசி ஆகியோரிடத்தில் காணும் நுட்பமான ஒற்றுமையும் வேற்றுமையும் தொடர்பின் தொடர்ச்சியாக இருப்பதை அறிகிறோம் அல்லவா!! நல்லது. இப்படியாக ஒரு தொடுப்பிணைத்து பார்த்துவிட்டு
 மனதுக்குள் மட்டற்ற ஆனந்தமும் உவகையும் கொண்டு உணவு கூட இல்லாமல் உறங்கி விட்டேன். மறுநாள் காலையிலும் அந்த ஆனந்தத்தின் அதிர்வலைகள் எனது உள்ளத்திலும் உணர்விலும்  தொடர்ந்து அலைந்தன. எவ்வளவு பெரிய பாரம்பரியமிக்க நாடகத்தில் ஒரு பங்களிப்பாளராக போகிறேன் என்ற பரவசம் என்ற மகிழ்ச்சி பிரவாகம் மனதுக்குள். 'யப்பா நினைக்கவே நெஞ்சம் பூரிக்கிறது . பிறகு, எனது  நண்பர்களில் ஒருவரான மில்டன் அவர்களிடம் எனது தஞ்சை வருகை பற்றி அலைபேசியில் சொல்லிவிட்டு பயணத்துக்கு உண்டான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்தேன். இந்த மில்ட்டனை பற்றி கூற வேண்டும் என்றால் இவர் எனக்கு கொரோனா காலகட்டத்தில் அறிமுகமானவர். அனைத்து விஷயங்களையும் அறிந்தவர். எனக்கு கிறிஸ்தவம் சம்பந்தப்பட்ட சந்தேகம் ஏதும் ஏற்படும்போதெல்லாம் இவரைத்தான் கலந்து ஆலோசிப்பேன். அம்மட்டும் இல்லாமல் வாழ்வின் அனைத்து துறைகளிலும் சிறிதளவு செய்திகளையாவது தொகுத்து வைத்திருப்பார். சமயங்களில் இவரிடம் வாயைக் கொடுத்து விட்டால் காதை பிடுங்க முடியாது. அவ்வளவு தூரம் ஒரு விஷயத்தைப் பற்றி பல  தகவல்களை கூற ஆரம்பித்து விடுவார்.  அதாவது எங்கள் கொங்கு வட்டார வழக்கின்படி 'ஊமையன் வீட்டுக்கு உளறுவாயன் பண்ணாடி' என்பதை போல. ஆக மிகச் சிறந்த என் அருமை நண்பர்களில் ஒருவர். இவருக்கு தஞ்சாவூரில் நான் 'தண்ணி' காட்டிய போது , எனக்கு ஈரோட்டில் பெருந்துறை சந்தையை காட்டியவர். இருக்கட்டும், நல்லது. சரி, அடுத்த விஷயத்தை கவனிப்போமா ..
அது என்னவெனில், கிறிஸ்தவ மதம் சார்ந்த சில குறிப்புகள். இவை நான் அறிந்த தகவல்கள்.
------------------------------------------
    (ஏரோது மன்னனின் கொலைவெறித் தேடல்)           
                                  

                              (2)
                  சில குறிப்புகள்
இந்த குறிப்புகள் நான் வாசித்தும் நேரில் கண்ணுற்றும் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவையுமாகும். குறுந்தொலைவுதான். ஆனால், நெடுநேரப் பயணம். தொடர்வோமா...
எனது வாழ்வில், இயேசு பிரான் எங்ஙனம் வந்தார் எனில், எட்டாம் வகுப்பு பயின்ற பதின்பருவ துவக்க நிலையிலது நிகழ்ந்தது. 

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந் தெந்தாய்,
இன்னதென அறிகில்லார் தாஞ்செய்வ திப்பிழையை

மன்னியும் என் றெழிற்கனிவாய் மலர்ந்தார்நம்

அருள்வள்ளல்' 

- இரட்சணிய யாத்திரிகம் நூலில் வரும் ஒரு செய்யுள். இயற்றியவர் H.A. கிருஷ்ணபிள்ளை. திக்கெலாம் புகழும் திருநெல்வேலியிலே ரெட்டியார்பட்டியில் வேளாளர் மரபில் தோன்றிய இவர், கிறித்துவ சமயத்தினைச் சார்ந்தார். இவர் ஜான் பனியன் (John Bunyan) என்னும் மேனாட்டு ஆசிரியர் எழுதியுள்ள துறக்கப் பயணம் (Pilgrims Progress) என்னும் நூலினைத் தமிழ்ப்படுத்தினார். அந்நூலே தமிழில் 'இரக்ஷணிய யாத்திரிகம்' எனப்படுவது. இக் காவியத்தில் வரும் உருக்கமான ஒரு பாடலைத்தான் 8ஆம் வகுப்பில் தமிழ் மனப்பாடச் செய்யுளாக வைத்திருந்தார்கள். இயேசுநாதரின் பொறுமையினை - மன்னிப்பைப் படம் பிடித்துக் காட்டுகிற இப்பாடல் மூலமாகத்தான் என் மனதில் வணங்கத் தக்கவராய் வந்தமர்ந்தார் இயேசு பிரான். இப்பாடலுக்கு எனது தமிழாசான்களில் ஒருவரான எனது போற்றுதலுக்குரிய திருமிகு. ஜம்புலிங்கம் விளக்கவுரை தந்த அழகே அற்புதமானது.

முதற்கண்,  இயேசு என்பவர் யார்? அவர்தம் ஆளுமை எத்தன்மையது? அவரது நெறி யாது? போன்றவற்றை விளக்கமாக எடுத்துக் கூறினார் ஒரு சிறந்த உண்மைக் கதை நாவலைப் போல. அத்தோடு, அந்த வகுப்பின் நேரம் நிறைவு பெற, அடுத்த நாளின் வகுப்பில் தொடர்ந்து பாடம் நடத்தினார் எங்கள் தமிழாசான். அதில், இயேசுவின் இந்த மன்னித்தல் மாண்பு

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் -அவர்நாண

நன்னயம் செய்து விடல்'

என்ற திருவள்ளுவரின் திருக்குறளுக்கு  நல்இலக்கணமாகும் என்று எடுத்துக்காட்டுக் கூறி எடுத்துரைத்தார். அதிலும், நாண, நன்னயம் என்ற இரு சொற்களுக்கு அவர் தந்த பதவுரை விளக்கமும் உரையும் தமிழ் மீது அதீத பற்றும் மிகுபேரவாவும் கொள்ள வைத்தது. 'நாண'(நன்ன)யம், 'நா நயம்', என சொற்களையும் அச்சொற்களில் உள்ள  இடம் மாற்றி புதிய கோணத்தில் திருக்குறளுக்கு மாற்றுப் பார்வை விளக்கம் காட்டி ருசியூட்டினார். யப்பப்பா... அமிழ்து அமிழ்து தமிழ் அமிழ்து பருகிய தன்னேரற்ற தருணங்கள் அவை. இருக்கட்டும், நல்லது. மேலும், 

பகைவனுக் கரு"ள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!" 

என்ற மகாகவி பாரதியின் பாடலோடு இயேசுவின் மன்னிப்பையும், தேசப்பிதா மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டும் சான்றுகள் கூறினார். ஆக, இப்படியாகத்தான் இயேசு என்னுள் முதலில் பதிவானார். அதன் பின், பல்வேறு நிகழ்வுகளிலும் தருணங்களிலும் நன்மதிப்போடு அவரை உணர்ந்தேன். 

இன்னும் இயேசு குறித்து நல்லதான- உண்மையான ஆழ்புரிதலுக்கு துணை நின்றவை என் ஆன்ம விழிப்புக்கு பெரிதும் உதவிட்ட எஞ்ஞான்றும் என் போற்றுதலுக்குரிய ஓஷோ 

 அவர்களின் உரைகள்தாம். மெய்யாகவே சொல்லுகிறேன். 

இனி, இயேசு,  பைபிள் மாந்தர்கள் குறித்து நானறிந்த பதிவுகளையும் தஞ்சை பாஸ்கா குழுவினரைப் பற்றிய பார்வைக் கோணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து பயணிப்போம். 

"அன்பு உங்களுக்கு மணிமுடியும் சூட்டும்;  உங்களை சிலுவையிலும் அறையும்; உங்களை வளர்க்கவும் செய்யும்; நறுக்கவும் செய்யும் ".

கலீல் ஜிப்ரான் 

தீர்க்கதரிசி

-----------------------


                             (3)

பதிநான்கில் பயணம்

அதிகாலை. பிரம்ம முகூர்த்தம் என்னப்படும் 4.30 மணியிலிருந்து 6 மணி வரைக்குள் இவ்ஈஸ்வர பக்தன் இயற்கை எழிலையும் இலந்தையின் நிறமொத்த இளஞ்சூரியனையும் வணங்கி நீராடி புத்தாடை உடுத்தேன். நாட்காட்டி நாள் 14.4.2025. எனது இளவல் ஈசுவரனை அழைத்து அவனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து பெருந்துறை வந்து, ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறிக் கிளம்பினேன். ஆச்சரியம் பாருங்கள்.. பேருந்தில் 'அன்பென்ற மழையிலே அகிலங்கள் போற்றவே அதிரூபன் தோன்றினானே.." என்ற பாடல். எனக்கு, தனது இருக்கையருகே அமர இடமளித்த இளம்பெண் பெயர் ஜெப மேரி. ஆம், அவளது கல்லூரி புத்தக அட்டையில் எழுதியிருந்த பெயர் அதுதான். இது- இந்த நிகழ் தற்செயலாகத் தோன்றவில்லை. ஏதோ திட்டமிட்ட இறைமையினால் எழுதப்பட்ட நாடகமாகவே தோன்றியது. மனதுக்குள் பேரன்பின் வழிபாடு செய்தேன். வழியில், பேருந்தின் சாளரத்தினூடாக திண்டல் ஆண்டவனாம் செந்தில்வேளை வணங்கினேன் இருகை கூப்பி. பிறகு, ஈரோட்டின் பேருந்து நிலையம். ஓர் உணவு விடுதியில், இரண்டு பரோட்டாக்கள், ஒரு செட் பூரி, ஓர் ஆம்லெட்.  காசைக் கொடுத்துவிட்டு மீண்டும் பேருந்து நிலையம். திருச்சி செல்லும் பேருந்தில் பயண ஒப்புகை வாங்கி அமர்ந்தேன். நேரம் காலை 10 மணி. இனி, இடைவெளியில் எங்கும் நிற்காமல் கரூரில்தான் பேருந்து நிற்குமாம். எனவே, இரண்டு தர்ப்பூசணி கீற்றுகளும் இரண்டு வெள்ளரிக்காய்களும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

என்னருகே அமர்ந்திருந்த பயணர் பேராசை மிகுந்தவர் என்பது அவர் தாமாகவே முன்வந்து உரையாடலில் அறிய நேர்ந்தது. அவரின் தொணதொணப்பு தாளவில்லை என்னால். 'ஐந்து மணி நேரப் பிரயாணம் இவரோடா.. கடவுளே" என்று பயந்தேன்.   பணத்தையே தன் 'குறி'யாய்க் கொண்டு பிறந்தார் போலும். நல்ல 'குறி'க்கோள்டா நடராஜா. சரி தொடர்வோம்.

யூதாஸ் மனம் வருந்துவது

உற்று உள்நோக்கின், இச் சித்தன் இச்சித்து பயணிப்பது 'யூதாஸ்' ஆக பாஸ்கா நாடக விழாவில் நடிக்க இருக்கும் நண்பர் பிரான்சிஸ்ற்காக . ஆயிடினோ, அருகினில் இருப்பவரோ- அதாவது, என்னோடு பயணிப்பவரோ 'மைதாஸ்'. முன்னது you எனில், நேரெதிர் my ஆகுமன்றோ!? ஆகக்கூடி, நிஜத்தில் ஆங்கில மொழியில் 'மைதாஸ்' என்பவர் Midas; 'யூதாஸ்' என்பவர் Judas எனவும் குறிக்கப் பெறுகின்றனர் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. இங்கே, ஓர் ஒத்திசைவு கருதி you'das, my''das என அழைக்கப்படுகின்றனர். சரியா!.
மைதாஸ் என்பவர், 'தான் தொட்டதெல்லாம்  தங்கமாக வேண்டும்' என விரும்பிய ஒரு மன்னர். யூதாஸ் என்பவர் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக ஜே.சி.யைக் காட்டிக் கொடுத்த அக்காலத்தின் 8ட்டப்பன் (ஜே.சி. என்றால், Jesus Christ என இந் நவீன காலத்தில் அழைக்கப்படும் ஒரு குறிப்புச் சுருக்க பெயர்ச்சொல். எனவே, காலம் மாறி விட்டதால், J. C. என்றே Jesus Christ ஐ அழைக்கப்படுவதாக கவிஞர் புவியரசு தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்). 
உண்மையில், யூதாஸ் என்பவன் புரட்சியாளன் எனவும் இயேசுவைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் - அவர் கைது செய்யப்படுவது நிமித்தம் மக்கள் சினங்கொண்டு அரசுக்கெதிராக புரட்சியில் ஈடுபடுவார்கள் என எண்ணியே செய்தான் என்பதாக செக்லோஸ்லவிய கவிஞர் ஒருவர் 'judas speaks' என லண்டன் என்ற மாத இதழில் கவிதை புனைந்துள்ளார். 
'... .. 
.............. 
எல்லாம் கெட்டு விட்டது. குருவைக் கைதாக்கினால் அது காணும் மக்கள் சினத்தொடு சீறி எழுவர் என எதிர்பார்த்தால் சுரணையில்லா மனிதர்கள் சும்மா இருந்து விட்டனரே' எனப் புலம்பி ஏமாற்றத்துடன் தன்னைத் தானே கொன்று கொல்கிறான்- கொள்கிறான் என்பது இக் கவிஞரின் புனைவுத் துணிபு. இது குறித்து மேலும் விபரங்களுக்கு ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் பற்றி எனது போற்றுதலுக்குரிய கவிஞர் புவியரசு அமைத்த நூல் வாசியுங்கள். நல்லது. ஆஃப்டர் த பிரேக். காரணம், எனது பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்ததின் விளைவே. 
ஊஞ்சலூர் என்றோர் ஊர். ஊஞ்சலாட்டம் ஆடி நின்றது பேருந்து. பேருந்து என்பதின் 'ரெட்டைக் கொம்பு' விடுபட, 'பருந்து' ஆகுமன்றோ! அங்கே, புகைவண்டி குறுக்கு வாயில் ( I mean railway cross gate). இரயில் வந்து போ ன பின்புதான் கேட் (gate) திறக்கப்படும் என நடத்துநர் சொன்னதை gateக் கொண்டு இறங்கினேன் சிறுநீர் ஆகிய பெரும் இடர் கழிக்க. என்னுடனே  கச்சணிந்த- கச்சணியா மாதரும் உடன் ஆடவரும் இறங்கல் ஆக, அடியேன் 'சிறுநீர் பையன் மறைவுக்கு' இரங்கல் பா வாசித்தேன் ஓர் ஒதுக்குப்புற மறைவிடம் தன்னில். 
எப்போதும் அரைமணிக்கொரு முறை வலக்கையின் ஆக்காட்டி & நடுவிரல் இடுக்கில் புகைய வேண்டும் ஒரு சிகரெட் அன்றேல் குறைந்தபட்சம் ஒரு கட்டை பீடி. ஆம், அது நுரையீரல் பசிப்பிணி. சட்டைப் பையில் இருந்தன கோல்ட் ஃபில்டர் மற்றும் கொளுத்து கோலுறையும் (தீப்பெட்டி). பற்றினேன் பற்றற்றான் தாளை (தாள் என்பது புகையிலை சுருட்டிய paper என இங்கே அழைக்கப்படும்). 
'புகைவண்டி கடப்பருகே புகை பிடித்தேன்' என அறிந்தோர் அரிக ஓர் உள்ளிப்பூண்டை. உளறுவோனுக்கு உதாரணம் உள்ளி. இதை எனது போற்றுதலுக்குரிய கவியரசு கண்ணதாசன், 'படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில் பாடலாய் வடித்திருப்பார்  இப்படி (இ(தை)ப்படி):-
"ஓஹோஹோ  
ஓ மனிதர்களே.. 
.......... 
............ 
உரித்துப் பார்த்தால் 
வெங்காயத்தில் 
ஒன்றும் இருக்காது - அதுபோல்
உளறித் திரிபவன் 
வார்த்தையிலே
ஓர் 
உருப்படி தேறாது. "
இருக்கட்டும்..
 நல்லது. 
அவ்வூஞ்சலூரில் மறைவிட மர்மஸ்தான உறுப்பிடர்  நீங்கி வெளிப் போந்த நேரத்தில் சிகரெட் மறைவெய்தியது. 'ஆஹா.. இதுதானோ நான்கு மறை தீர்ப்பு!? ' 
பார்த்தேன்.. அக் கிராஸ் அருகில் இருந்தது ஒரு பெட்டிக்கடை. அங்கே பூ விற்றிருந்தால் அது 'பொட்டிக்' கடை என வைக்கப்பட்டிருக்குமோ.. 
"அக்கா! தங்கம் வடிகட்டி ஒன்று தாருங்கள்".
" கண்ணு.. அப்படின்னா ஒண்ணும் வெளங்கலையே சாமி.. ".
ஆஹா.. என் தமிழ் எங்கள் வட்டார கொங்குத் தமிழச்சிக்கு விளங்கவில்லையா.. 
அவ்வாறெனில், ஆங்கிலத்தை கைக்கொண்டு வாய்மொழி ஆற்றுதலே வாய்மை அல்லவோ.! 
உண்மையில், வாய்மை என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் Lipstick ஆகுமன்றோ...! இருக்கட்டும். நல்லது. 
ஆகவே, "Gold filter cigarette குடுங்க அக்கா" என்க, 
"இத முன்னுக்காலயே சொல்லலாம்முல்ல கண்ணூ.. " என்று  'மஞ்சள் பிசாசு' உறை விடுத்து ஓர் ஊதுபத்தி தந்தார்.
"அண்ணே.. ஹால்ஸ் மிட்டாய் ஒண்ணு வாங்கியாங்க" என வேண்டினார் சக பயணரான பேராசையாள். ஐந்தாய்ப் பெற்று ஒன்றை என் வாயில் இட்டு மீதியை அவருக்கே அன்பளித்தேன் ஜன்னல் வழியே. 
"எதுக்குண்ணே இம்புட்டு? ஒண்ணு போதுமே" என்றுவிட்டு வெகுமகிழ்வோடு  நான்கையும் கையால் பெற்றுக் கொண்டார். புகைக்கும் வாயோடு புன்னகைத்தேன். இங்கே ஒரு சொல் பதிவு. தமிழில் கைத்தல் என்பது  கசப்பைக் குறிப்பது. அன்போடு ஹால்ஸ் இனிப்பை கையால் வழங்கிவிட்டு மனக் கசப்பை பெற துணிவேனா என்ன! ஆதலினால், புன்னகைத்தேன். இன்னொன்று, கைத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு சொல் விளையாட்டு சிலேடையாய் செய்யுளில் உண்டு. 
தலைவனால் வெறுக்கப்பட்டாள் தலைவி. வேதனை மிகுந்து தலைவி 
"அன்று நான் 
உமக்கு உள்ளங்கைத்தேன். 
இன்று ஏனோ நான்
உமக்கு உள்ளங் கைத்தேன்"
என்று கேட்கிறாள் தலைவனிடத்தே. 
'ஏன் உமது உள்ளம் கசந்தேன்?'  என கண்ணைக் கசக்கி அழுகிறாள். 
ஏகாந்தமாய் புகையிழுத்து வெளிவிட்டு நுரையீரல் விடாய் தணித்தேன். 
இலேசான தூறியது வான்மழை. 
இப்போது, 
" Rain rain go away " 
எனப் பாடாமல்
"Train train go away"
எனப் 🎶பாட வேண்டும் அல்லவா. 
ம்ஹூம்.. எனக்கு கவிதை பாட 
'Train'ing போதாது. 
கடந்து போனது மலைப்பாம்பென இரயில் (பழைய உவமைதான் எனினும் இவ்இடம் சுட்டுதல் பொருந்தும்); திறந்தது மணிக்கதவம்; நான் ஏற; புறப்பட்டது மழைச் சாரலில் சிறுபூச்சியென பேருந்து; அகப்பட்டது தட்டாம்பூச்சிகளின் தரிசனம்; அழகு அழகு. அடடா.. 
அட்டைப் படத்தை எடுத்து அனுப்பியவர் என் இனிய தம்பி ஈசுவரன் நாச்சிமுத்து. 

                                ( 4 )
           அவருக்கோர் அழைப்பு
 "ம்.. ம்.. பஸ்ல வந்துகிட்டிருக்கேன்"
" ... ... "
"ஏய்.. வந்துகிட்டிருக்கேன்னு சொல்றனில்லடி. போனை வையி பஸ்ட்டு" - 
ஆத்திரத்தோடு அழைப்பானை அணைத்தார். மீண்டும் ஒரு 'கால்'. துண்டித்து மின்கலத்தை கழற்றி 'ஆப்' செய்தார். குதூகலமாக உரையாடியவர் இப்போது முகம் மாறி குதிகால் கொண்டு பேருந்து நிலத்தில் உதைத்தார். கைமுஷ்டி பிடித்து தொடையில் குத்திக் கொண்டார். நான் நோக்க கண்டு புன்னகைக்க முயன்று வேதனையோடு பார்த்தார். "ஏண்ணே.. இந்த பொட்டப் புள்ளகள பெத்துக்கறது பாவமாண்ணே..? "
நான் குத்து மதிப்பாக தலையசைத்தும் அசைக்காமலும் பார்க்க- மனிதர் தன்துயர் மொழியத் துவங்கினார். 
அவர் பிறந்தது காங்கேயம் அருகே உள்ள நொய்யல் பகுதி கிராமம்  (எனது போற்றுதலுக்குரிய எழுத்தாளுமை தேவிபாரதி எழுதிய நொய்யல் நாவலில் வரும் அதே நொய்யல்தான்). அவர், 
கொடுமுடி  மகுடேஸ்வரர்  திருவருளால் பிறந்தவர் என்பதால் மகுடேஸ்வரன் எனப் பெயரிட்டு அழைத்தனர் பெற்றோர். வல்வில் ஓரி வம்சாவளியைச் சேர்ந்த வேட்டுவ வேளாளர். சிறுவயதிலிருந்தே வறுமை. தாயும் தந்தையும் விபத்தொன்றில் காலமாக.. ''அய்யோ அய்யோ எப்படிண்ணே சொல்வேன்''. சோற்றுக்கே திண்டாட்டம். 'கத்தாழச் சோத்த நிற்பேன். என்றாவது ஒருநாள் பக்கத்தூர் பள்ளிக்கூட ஆயா மதியச் சாப்பாடு கொண்டு வந்து தருவார். அதுவும் எப்போது? இந்த ஐந்து வயதுப் பையனுக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு மேலே.
அவ்வப்போது, அக்கம்பக்கத்து தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் பண்ணைய வேலைக்குப் போய் வரும்போது ஏதாவது பன்னோ ரொட்டியோ வருக்கியோ கண்ணாடிக் காகிதத்தில் சுற்றி எடுத்து வந்து தந்துவிட்டு அஞ்சு காசோ பத்துக் காசோ கொடுத்துச் செல்வர். 
காங்கேயம் அருகே விசைத்தறிக் கூடத்தில் தார்க்குச்சி (தார்க்குச்சி - தறி நாடாவில் போடப்படும் ஊடை நூல் உள்ள குச்சி) சுற்றப் போனாலோ சின்னப்பிள்ளை என துரத்த - வேப்பம்பழம் பொறுக்கி வேப்பங்கொட்டை விற்பனை செய்து சீவனம்.
இப்பயணத்தில் அல்லாத அவரது இறந்த காலத்தில் ஒருநாள், சற்றொப்ப சந்தனக் கலர் சட்டை, கறுப்பு நிற பேன்ட் அணிந்த மனிதர் நொய்யல் அருகே உள்ள இந்த அநாதையின்  கிராமத்திற்கு வந்திருக்கிறார். வந்தவர், "ராசாத்திக்கா வீடு எங்க இருக்கு? " என வினவ, 
"ஆரு.. சின்னப் பொன்னான் மருமவ வூடா? அவ செத்து இத்தனாம் நாளிருக்கும் போப்பா" என்றது ஒரு வேட்டுவக் கவுண்டன் குரல். 
"அதாரு (அது + ஆரு).. ரவி மாமனாரா!? நான் ராசாத்தி பைனுக்குத்தா கம்பஞ்சோறு கொண்டுட்டுப் போவ (போக) தயிரூத்தி பெனைஞ்சு (பிசைந்து) வச்சேன். இந்தா ரண்டு பேரும் சேத்தி அவளூட்டுக்குப் போவம்" என்றது தாயொப்ப ஒரு வேட்டுவக் கவுண்டச்சி  குரல் . 

இவர்கள் போன நேரத்தில் ராசாத்தி பையனான மகுடேஸ்வரன் அங்கில்லை. கவுண்டச்சி 'என்ன சமாச்சாரம்?" என விசாரிக்க,
"பையனை மதுரைக்கு கூட்டிட்டுப் போலாம்னு வந்தேனுங்.. ஓட்டுலு (ஓட்டல்) ஒண்ணு வச்சிருக்கறனுங்... பையனையும் கூட்டிட்டுப் போனம்னா நம்புளுக்கும் கொஞ்சம் எல்ப்பா (ஹெல்ப்பாக) இருக்கும். என்ற சின்ன அத்தையோட பெரியப்பா மகனோட மருமகன்தேன் இவிய அப்பன். எனக்கு என்ன மொறையாகறான்னு பாத்துக்குங்.." என்றிருக்கிறார் வந்தவர்.

"வீரக்கொமாரு சாமி வழியுட்டுட்டாரு போங்.. எனக்கும் இவென் மூனாம் பங்காளிப் பையந்தேன். இந்தப் பையன் எங்க போனானோ .. காணமே.. சித்தே இருங்.. காப்பித் தண்ணி கொஞ்சோம் கொண்டாறே(ன்)"
"ம்கூம்.. அதுக்கெல்லா நேரமில்லீங்.. நாங் கெளம்போணும்"

"அட கெரவத்தே.. சொந்தக்காரங்கன்னே ஆயாச்சு. கொஞ்சூன்டு சாப்டுங்"

"வாண்டாமுன்னா (வேண்டாம் என்றால்) கேளுங்.. பொறவொரு நா(ள்) வந்தன்னா பொறுமையா கெடா விருந்தே போடுங். செரி செரி, நாங் கெளம்பறன்".

"செரி, வெத்தல பாக்காவது போட்டுக்கலாமுல்லோ..!"

"பொவியில (புகையிலை) மட்டும் துளியூன்டு குடுங்.."





1 கருத்து:

  1. சிறப்பு. ஏன் ஒரே பதிவு? முழுவதும் தெரிவியுங்கள் குருநாதா

    பதிலளிநீக்கு